புதுதில்லி எனக்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜனை பிரதமர் நரேந்திர மோடி தூண்டிவிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முடிவுகளில் ராகுல் காந்தி தலையிட்டதாக ஜெயந்தி நடராஜன் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு, பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினா. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியபோது…. ஒரு நாள், அவருக்கு (மோடி) எதிராக நான் ஏதோ கருத்து தெரிவித்தேன். அதற்கு அடுத்த நாளே, எனக்கு எதிராக ஜெயந்தி நடராஜனை அவர் தூண்டிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தூண்டுதலாலேயே, காங்கிரஸில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகியுள்ளார். காங்கிரஸ் கட்சியை குறிவைத்து, மோடியின் அரசு செயல்பட்டு வருகிறது. ஏழைகள், ஆதிவாசிகளின் நலன்களுக்காக நான் போராடி வருகிறேன். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ஜெயந்தி நடராஜன் இருந்தபோது, சுற்றுச்சூழல், ஏழைகள், ஆதிவாசிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன். பிரதமர் நரேந்திர மோடி, தனது வர்த்தக நண்பர்களின் நலன்களுக்காக மட்டுமே பணியாற்றி வருகிறார். ஆனால் நானோ, ஏழைகள், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு நன்மைகள் கிடைப்பதை உறுதி செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். சில பெருமுதலாளிகளுக்கு நன்மைகள் செய்வதற்காக அரசியலுக்கு வரவில்லை. ஏழைகளுக்காகவும், குடிசைவாசிகளுக்காகவும், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்காகவும் தொடர்ந்து நான் போராடுவேன். ஊழல் குறித்து பிறர் பேச மட்டும்தான் செய்கின்றனர். ஆம் ஆத்மி தலைவர் (அரவிந்த் கேஜரிவால்) அதுகுறித்துப் பேசுகிறார். பிரதமரும் அதுகுறித்து பேசுகிறார். இதுகுறித்து அவர் தற்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் பேசியுள்ளார். ஊழல்களில் பெரும்பாலானவை, நிலத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளன. ஆகையால்தான், அந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஊழலுக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவிலும், ஒடிஸா மாநிலம் நியம்கிரியிலும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. இதற்கு முன்பு, பிரதமரும், முதல்வரும் யாருடைய நிலத்தை வேண்டுமானாலும் பறித்து, அவற்றை முதலாளிகளுக்கு வழங்க முடியும். நொய்டாவில், 2,000 ஏக்கர் நிலம் “பார்முலா ஒன்’ கார் பந்தயம் நடத்தும் அமைப்புக்கு வழங்கப்பட்டது. “பார்முலா ஒன்’ கார்பந்தயம் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், அதன் பெயரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பறிக்கப்பட்டுவிட்டது. விவசாயிகளை காங்கிரஸ் பாதுகாத்தது. விவசாயிகளின் நலனுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியது. பாஜகவைச் சேர்ந்தவர்கள், அதை எதிர்த்தனர். ஆனால், அந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் நிறைவேற்றியது. அது, எளிதான செயலாக இருக்கவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 2ஆவது ஆட்சிக்காலத்தில் அதுதான் மிகவும் கடினமான பணியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த விவகாரம்தான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தால் பாதிக்கப்பட்ட சக்திகள், காங்கிரஸூக்கு எதிராக செயல்பட்டன. மத்தியிலும், தில்லியிலும் காங்கிரஸ் கட்சி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. மத்தியில் ஆட்சியிலிருந்தபோது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் வகையில் தகவல் உரிமைச் சட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்துள்ளது. தில்லியில் ஆட்சியில் இருந்தபோது, அதன் தோற்றத்தையே மாற்றிக் காட்டியது என்றார் ராகுல் காந்தி.
எனக்கு எதிராக ஜெயந்தி நடராஜனைத் தூண்டிவிட்டவர் மோடி: ராகுல் குற்றச்சாட்டு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories