சென்னையில் ஐபிஎல் 2ஆவது கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கப்படுமா என சந்தேகம் வலுத்திருந்த நிலையில், சென்னையில் இனி நடைபெற உள்ள 6 ஐபிஎல் போட்டிகளையும் வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய பிசிசிஐ அதிகாரிகள் முடிவு செய்ததாகத் தெரிகிறது.
இது குறித்து பிசிசிஐ, ஐபிஎல் அதிகாரிகள் தில்லியில் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் செய்ய ஆலோசனை நடைபெறுவதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் டிக்கெட் விற்பனை தொடக்கம் இன்று மதியம் வரை உறுதி செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் நடக்காவிட்டால் தமிழக அரசு, தமிழக கிரிக்கெட் வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கிரிக்கெட் விமர்சகர் மோகன்ராம் கருத்து தெரிவித்திருந்தார்.
முதல் போட்டிக்கு, சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு அளித்தனர். இருப்பினும் நேற்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்ற போது வன்முறை வெடித்தது. போலீஸார் மீது தாக்குதல் தொடுக்கப் பட்டதால், தொடர்ந்து பதற்றம் நிலவியது. இந்நிலையில், கிரிக்கெட் போட்டிக்கு இது போல் மீண்டும் பாதுகாப்பு கொடுக்க போலீசார் மறுப்பதாக தகவல் வெளியானது.
இதனிடையே இன்று மதியம் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், சென்னையில் வரும் 20-ஆம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெறாது என்று கூறினார்.
இயக்குனர் அமீர், ரஜினியின் டிவிட்டர் பதிவுகள் குறித்து ஒரு பிடி பிடித்தார். ரஜினியின் ட்விட்டர் பதிவுகள் அதிகாரத்துக்கு ஆதரவாகத்தான் பேசுகிறது என்றார் அவர்.
சென்னையில் மீண்டும் ஐபிஎல் போட்டியை நடத்தினால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தார் பன்ருட்டி வேல்முருகன்.
ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது என்பது விவசாயிகளின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி. தமிழர்களின் உணர்வுகளை இனியாவது மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவிதார் தமிமுன் அன்சாரி.
இயக்குனர் பாரதிராஜா இந்த நடவடிக்கை குறித்துக் கூறியபோது, போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி; இது தமிழன் என்ற அடையாளத்திற்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார். மேலும் அவர், வரும் 20ஆம் தேதி ஐபிஎல் நடக்கும்போது போராட்டம் வேறுவிதமாக இருக்கும் என்று கூறினார்.
மேலும், சிலர்(ரஜினி) நேற்று நடந்ததை வன்முறை என்கின்றனர். அது வன்முறையல்ல; எதிர்வினை! அதனால் எதிர்வினையை மட்டும் பூதாகரமாக பேசுவது சரியல்ல! நாளை பிரதமர் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது நிச்சயம்; ஆனால் எங்கு என்பதைக் கூற முடியாது என்று கூறிய பாரதிராஜா, ரஜினி வாய் மட்டுமே அசைக்கிறார்; அவருக்கு வேறு யாரோ குரல் கொடுக்கின்றனர் போராட்டத்தில் எதிர்ப்புதான் தெரிவிக்கப்பட்டது; யார் யாரையும் தாக்கவில்லை என்றார்.
சென்னையில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இதனிடையே, இந்த ஐபிஎல் சீஸனை வைத்து வியாபாரமாவது ஓடும் என்று எதிர்பார்த்திருந்த உள்ளூர் வியாபாரிகளின் பிழைப்பில் மண் விழுந்துள்ளது.