நிர்மலா தேவி விவகாரத்தில் திடீர் திருப்பங்கள்…! என்னதான் நடக்கிறது மேல் மட்டத்தில்?!

முன்னதாக, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற புகாரில் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார். இந்நிலையில், அவரிடம் இருந்து அவர் பயன்படுத்தி வந்த 3 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் திடீர் திருப்பங்கள் பல நிகழ்ந்துள்ளன. இன்று இரண்டாவது நாளாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், போலீஸாரின் விசாரணையை சிபிசிஐடி போலீஸார் வசம் மாற்றி உத்தரவிட்டுள்ளார் டிஜிபி ராஜேந்திரன்.

முன்னதாக, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற புகாரில் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார். இந்நிலையில், அவரிடம் இருந்து அவர் பயன்படுத்தி வந்த 3 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே இன்னொரு திருப்பமாக நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த ஐந்து நபர் கொண்ட குழுவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நியமித்திருந்தது. அதனை திடீரென வாபஸ் பெற்றுள்ளது பல்கலைக் கழகம்.

சர்ச்சைப் பேச்சு தொடர்பாக கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி போலீசாரால் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இப்போது சிபிசிஐடி வசம் விசாரணை ஒப்படைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநர் மாளிகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை சந்தித்துப் பேசினார். அப்போது பேராசிரியை விவகாரம் குறித்தும், பல்கலை சார்பில் நடத்தப்படும் விசாரணை தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதனிடையே, ஆளுநர் இந்தப் பிரச்னையை விசாரிக்க ஒருநபர் விசாரணைக் குழு அமைத்திருந்தார். அது குறித்தும் விவாதிக்கப் பட்டது. அப்போது, ஆளுநர் மாளிகையில் இருக்கும் சிலரே, இந்த ஒரு நபர் விசாரணைக் குழு தேவையில்லை என்றும், பல்கலை., அமைத்திருந்த 5 பேர் விசாரணைக் குழுவே போதும் என்றும், அந்தக் குழுவின் விசாரணையை ஆளுநர் கண்காணித்திருக்க ஏற்பாடு செய்யலாம் என்றும் கூறினராம்.

இந்நிலையில், ஆளுநருடனான சந்திப்புக்குப் பின்னர், பல்கலைக் கழக துணைவேந்தர் செல்லத்துரை, தங்கள் பல்கலை., சார்பில் அமைக்கப் பட்ட விசாரணைக் குழுவைத் திரும்பப் பெற்றுள்ளார்.

முன்னதாக, தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, மாணவர்கள், பேராசிரியர்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் தலைவர் துணைவேந்தர். அவர்தான் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து உரிய நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுக்க ஆளுனர் ஏன் உத்தரவிட்டார் என்பது தெரியவில்லை. அவர் உத்தரவிட்டது ஏன்? இதில் குழப்பம் உள்ளது புரிகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்பது எனது கருத்து என்று கூறினார்.