மக்கள் நீதி மய்யம் கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்றும் அதனால் கட்சியில் இருந்து விலகுவதாகவும் வழக்கறிஞர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட போது, முன்னாள் போலீஸ் அதிகாரி மவுரியா, ஸ்டார் ஜெராக்ஸ் சவுரிராஜன் உட்பட பலர் கட்சியில் சேர காரணமாக ராஜசேகர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் கட்சியில் இருந்து விலகியுள்ளது குறித்து பேசிய வழக்கறிஞர் ராஜசேகர், கடந்த ஆறு மாதங்களாக கட்சி உருவாக பாடு பட்டு உழைத்தேன். ஆனால் அதற்கான அங்கீகாரமோ, மரியாதையோ கிடைக்கவில்லை. அதனால் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்றார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீ பிரியவும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ பிரியா தரப்பில் விசாரித்த போது, எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
நடிகர் கமல்ஹாசனால் கடந்த பிப்ரவரி 21ம் தேதி மதுரையில் தொடங்கப்பட்டது மக்கள் நீதி மய்யம். அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அகில இந்தியப் பொறுப்பாளராக தங்கவேல் அறிவிக்கப்பட்டார். மகேந்திரன், அருணாசலம், பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீபிரியா, ராஜ்குமார், கமிலா நாசர், சவுரிராஜன், ராஜசேகரன், சி. கே. குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜநாராயணன், ஆர். ஆர். சிவா ஆகியோரை உயர்மட்டக் குழுப் பொறுப்பாளர்களாக கமல்ஹாசன் அறிவித்தார்.
இதை தொடர்ந்து, திருச்சியில் பொது கூட்டம் நடத்திய போது பேசிய கமல்ஹாசன் தான் முதல்வரானால், லோக் ஆயுக்த அமைக்கும் சட்டம், மனித கழிவுகளை அகற்றும் பணிகளை எந்திரமயமாக்குவது, பள்ளிகளில் சாதியில்லை என்று குறிப்பிட்டு சேர்த்தால் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆகிய மூன்று சட்டத்தில் கையெழுத்திடுவேன் முதல் கையெழுத்திடுவேன் என்றும் தெரிவித்தார். தமிழக அரசியல் நிலை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த அவர், காவிரி நதிநீர், ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக திரைத்துறையினர் நடத்தும் போராட்டத்திலும் பங்கேற்றார்.