சென்னை பச்சையப்பன் கல்லூரியின் 175-ஆம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து பேசிய கல்லூரி முதல்வர் எஸ்.காளிராஜ், சென்னை பாரிமுனையில் 1842-இல் பச்சையப்பன் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. படிப்படியாக கல்லூரியாக உயர்ந்த இக்கல்வி நிறுவனம், 1940 இல் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பகுதிக்கு மாற்றப்பட்டது.
இக்கல்லூரியில்தான் கணித மேதை ராமாநுஜன் பி.யு.சி. பயின்றார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், திட்டக் கமிஷன் தலைவராக இருந்த பொருளாதார நிபுணர் பேராசிரியர் ரங்கா, முரசொலி மாறன் போன்றோர் இந்தக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள்.
1892 நவம்பரில் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லான்ஸ்டவுன் பிரபு தலைமையில் கல்லூரியின் பொன்விழா கொண்டாடப்பட்டது. 1902 நவம்பரில் மெட்ராஸ் கவர்னர் பென்ட்லாண்ட் பிரபு தலைமையில் கல்லூரியின் பவள விழாவும் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் நூற்றாண்டு விழா 1942-இல் அன்றைய கவர்னர் சர் ஆர்தர் ஹோப் தலைமையில் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் 125-ஆவது ஆண்டு விழா, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தலைமையில் 1968 மார்ச் மாதம் கொண்டாடப்பட்டது.
பின்னர் 150-ஆவது ஆண்டு விழா 1994 பிப்ரவரியில் கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரியின் புதிய கட்டடங்களை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா திறந்துவைத்தார்.
இப்போது கல்லூரியின் 175-ஆவது ஆண்டு விழா இன்று காலை 9.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் கொண்டாடப்பட உள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்க உள்ளனர்” என்றார்.