சென்னை:
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி நலமாக உள்ளதாக அவரது குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக சுவாசக் கோளாறு காரணமாக அவ்வப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் உடல் நலம் தேறி வீடு திரும்பி வந்தார் சோ.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி சென்னை வந்திருந்த போதும் சோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார் மோடி.
பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதாவும் சோவை சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார்.
இந்நிலையில் ஓரளவு உடல் நலம் தேறி வீடு திரும்பிய சோ ராமசாமிக்கு மீண்டும் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இந்நிலையில் சோ நலமாக உள்ளார் என்றும், அவரது உடல் நலம் தேறி வருவதாகவும் குடும்ப மருத்துவர் விஜய சங்கர் தெரிவித்துள்ளார்.