பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 94.1% மாணவிகளும், 87.7% மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில், பள்ளி மாணவ, மாணவிகள் 8 லட்சத்து 60 ஆயிரத்து 434 பேர். இவர்களுள் 4 லட்சத்து 60 ஆயிரத்து 255 பேர் மாணவிகள் மற்றும் 4 லட்சத்து 179 பேர் மாணவர்கள். பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 98 ஆயிரத்து 613 பேர். தொழிற்பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 821 பேர்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, ww.dge2.tn.nic.in ஆகிய இணையத்தளங்களில் காண முடியும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாநில அளவிலோ, மாவட்ட அளவிலோ சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளின் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை.
தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 91.1% பேர் மொத்தம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுள் 94.1% மாணவிகளும், 87.7% மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6.4% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017-ம் ஆண்டு 94.5% மாணவிகளும், 89.3% மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர்.
கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை மாணவர்களை விட மாணவிகளே தொடர்ந்து அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.