தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும் நான்கு நாட்களுக்கு, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு, கோடை கால துவக்கம் முதல், பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கோடை மழை தொடர்ந்து பெய்கிறது. இன்று முதல், அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பரவலாக, மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இம்மையம் கூறி உள்ளதாவது: தென் மாவட்டங்களில் பல இடங்களில், இடியுடன் கனமழை பெய்யும். சென்னையில் வானம், மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வரை, வெயில் பதிவாகும். அரபிக் கடலில், தென் மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமாகும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு நோக்கி, ஏமன், சோமாலியா நாடுகளுக்கு இடையே, ஏடன் வளைகுடாவை நோக்கி நகரும். இதனால், தமிழக கடற்பகுதியில், எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும், அரபிக் கடலின் தென் மேற்கு பகுதிக்கு, இந்திய மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்து உள்ளது.