ஐசிஎப் நிறுவனம் சார்பில் சர்வதேச ரயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி: இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை, பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையும், இந்திய தொழிற்கூட்டமைப்பும் (சிஐஐ) இணைந்து நடத்தும் சர்வதேச ரயில் பெட்டித் தொழில்நுட்பக் கண்காட்சி நாளை நடைபெறுகிறது. ஐசிஎப் ரயில்வே பாதுகாப்புப் படை மைதானத்தில் இன்று தொடங்கும் இக்கண்காட்சி வரும் 19-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில், 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்பெட்டித் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. கண்காட்சியை முன்னிட்டு ரயில் பெட்டி மற்றும் ரயில் தொடர் தயாரிப்பு தொழில்நுட்பம் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் மற்றும் கருத்தரங்கமும் நடைபெறும்.

மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட, வருங்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள, மணிக்கு 160 கிமீ-க்கும் அதிக மான வேகத்தில் இயக்கப்பட உள்ள ரயில் தொடர்களின் மாதிரி வடிவங்கள், வருங்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள ரயில் பெட்டிகளின் உள்ளமைப்பு, பயணிகள் வசதிகள் பற்றிய அறிமுகம், புல்லட் ரயில் போன்ற அதிவிரைவு ரயில்களை இந்தியாவில் தயாரித்து அறிமுகம் செய்ய உள்ள வாய்ப்பு, ரயில் பெட்டிகளின் வடிவமைப்புகள் உள்ளிட்டவை இக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியை பொதுமக்கள் இன்று மற்றும் நாளை மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிட அனு மதிக்கப்படுவார்கள்.