தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் 2 கட்டமாக கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்றுமுதல் 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார்.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு கமல்ஹாசன் தனது பயணத்தை துவக்கினார். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இன்று சுற்றுப்பயணம் செய்தார்.
இன்று திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் தனது பயணத்தை தொடங்குகிறார். வள்ளியூர், திசையன்விளை, உவரி வழியாக தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடுக்கு வருகிறார். திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, புன்னக்காயல், ஏரல், பண்டாரவிளை வழியாக மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடியில் இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். நாளை திருநெல்வேலி, விருதுநகரில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
முதல்கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பும் கமல், வரும் 19-ம் தேதி சென்னையில் பல்வேறு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் பங்கேற்க உள்ள ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
பின்னர் 2-வது கட்டமாக ஜூன் 8-ம் தேதி திருப்பூர், 9-ம் தேதி நீலகிரி, 10-ம் தேதி கோயம்புத்தூரில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளார்.