13 வயது மாணவியை பாலியல் தொழிலுக்கு தள்ளிய தாய்! 2 பேர் கைது; 5 பேருக்கு வலைவீச்சு!

13 வயது சிறுமியை தாயே பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம் கேரள மாநிலத்தில் மட்டுமின்றி இரு மாநில எல்லையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் புளியரையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீ மூலப்பேரி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.

இந்த நீர்தேக்கத்திற்கு அருகில் கேரளா மாநிலம் அடூர் பகுதியைச் சார்ந்த சைகால் சஜி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தை புளியரையைச் சார்ந்த தென்காசியில் பணியாற்றும் போலீஸ்காரர் மாரியப்பன் என்பவர் ஒப்பந்தத்திற்கு எடுத்து விவசாயம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த இடத்தில் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியைச் சார்ந்த கிரிஜா என்ற பெண் வசித்து வருகிறார். இவரது 13 வயது மகள் அனு (பெயர் மாற்றப் பட்டுள்ளது) திருவனந்தபுரத்திலுள்ள ஒரு பள்ளியில் தங்கி படித்து வந்துள்ளார்.

அவரும் விடுமுறைக்காக ஊருக்கு வந்து அம்மாவுடன் கடந்த ஒரு மாதமாக தங்கியுள்ளார். இந் நிலையில் கடந்த 13ஆம் தேதி மகளைக் காணவில்லை என புளியரை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் மகள் அனுவை ஐயப்பன் கேரளாவுக்கு அழைத்துச் சென்றது தெரிய வரவே கிரிஜா தென்மலை போலீசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து தென்மலை போலீசார் கிரிஜாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவரே தனது மகளை தனது வீட்டில் வைத்து இரவில் பலருக்கு விருந்தாக்கியதும், இதனைத் தொடர்ந்து சுரண்டை, பாவூர்சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விருந்தாக்கியதும், இதைத் தொடர்ந்து ஐயப்பனும் அனுவை பாலியல் தொழிலுக்கு அழைத்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தென்மலை போலீசார் ஐயப்பன் கட்டுப்பாட்டில் இருந்து அனுவை மீட்டனர். ஐயப்பன் தப்பி விட்டார்.

உடனடியாக கிரிஜாவைக் கைது செய்த போலீஸார் அவர் கொடுத்த தகவலின் பேரில் ஆரியங்காவு பகுதியைச் சார்ந்த சஜியை கைது செய்தனர். மேலும் சிறுமியை சீரழித்த அஜித், ஐயப்பன் உள்ளிட்ட சிலரை தென்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தென்மலை காவல்துறை ஆய்வாளர் சுதீர், உதவி ஆய்வாளர் பிரேம்லால் உள்ளிட்டவர்கள் கிரிஜாவையும், சஜியையும் அழைத்துக் கொண்டு புளியரை பகுதியிலுள்ள வீட்டிற்கு வந்தனர்.

அங்கு சிறுமி அணிந்திருந்த முக்கிய தடயங்களான ஆடைகளை சஜியிடம் கேட்டு அவற்றைக் கைப்பற்றினர். தொடர்ந்து இருவரையும் அவர்கள் சுரண்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

13 வயது சிறுமியை தாயே பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம் கேரள மாநிலத்தில் மட்டுமின்றி இரு மாநில எல்லையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.