கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் முதல் முறையாக இணையதளம் வழியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும் எனவும் துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி நிருபர்களிடம் தெரிவிக்கையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு மற்றும் 26 இணைப்பு கல்லூரிகளில், வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப்படிப்புகள் உள்ளது. இவற்றில் மொத்தம் 3,422 இடம் நிரப்பப்படவுள்ளது. வேளாண் பல்கலை 65 சதவீதம், அந்தந்த கல்லூரிகள் 35 சதவீதம் என்ற அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
பிளஸ்2 அறிவியல் படித்த மாணவர்கள் மட்டும் இன்று முதல் www.tnau.ac.in/admission.html என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, பதிவேற்றம் செய்யலாம். ஜூன் 17ம் தேதி பதிவேற்றம் செய்ய இறுதிநாள். ஜூன் 18 முதல் 20ம் தேதி வரை சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. ஜூன் 22ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூலை 7ல் சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 9 முதல் 13 வரை முதல் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 16ல் தொழில் கல்விக்கான கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 17, 18ல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 23 முதல் 27 வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஆகஸ்ட் 1ல் கல்லூரி துவங்குகிறது. ஆகஸ்ட் 31ம் தேதி மாணவர் சேர்க்கை நிறைவடையும். விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும், www.tnau.ac.in/admission.html என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
பொதுப்பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்சிடி பிரிவினர் ரூ.300 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைன் பேங்க்கிங், கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம். பிளஸ்2 மதிப்பெண் கடந்தாண்டு வரை நேரடி மாணவர் சேர்க்கை நடந்துவந்தது. இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணையதளம் வழியாக மாணவர் சேர்க்கை நடக்கிறது. மருத்துவ கலந்தாய்வுக்குபின், வேளாண் பல்கலை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.