கோவையில் சர்வதேசக் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி கான்ஃபேர் 2018′ இன்று தொடங்குகிறது.
கோவை கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் 6-ஆவது முறையாக, கொடிசியா தொழில் வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் இன்று முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2007-இல் தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்தில் 950 பேர் உறுப்பினர்கள் உள்ளனர்.
கோவையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவிலான கட்டட கட்டுமானப் பொருள்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்தக் கண்காட்சியில், 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கட்டுமானப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். நடப்பு ஆண்டில், கட்டுமானத் துறை சார்ந்த முன்னணி நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்கள், அதிநவீனக் கருவிகள், சிமெண்ட், டைல்ஸ், பெயிண்ட், எலெக்ட்ரிகல், பிளம்பிங், இன்டீரியர் டிசைன், பர்னிச்சர், மாடுலர் கிச்சன், மோட்டார் பம்ப், ஏசி, ரூபிங் ஷீட், செங்கலுக்கான மாற்றுப் பொருள், எம்.சாண்ட் போன்ற கட்டுமானத் துறை தொடர்பான மென்பொருள், கான்கிரீட், சோலார் பேனல், யுபிஎஸ், பாத்ரூம் ஃபிட்டிங்ஸ், பில்டிங் ஆட்டோமேஷன், கதவு, ஜன்னல்கள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
தேசிய அளவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 25-க்கும் மேற்பட்ட கட்டுமான நிபுணர்கள், பொதுமக்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை விளக்கம் அளிக்கின்றனர்.
மேலும், நிலவழிகாட்டி மதிப்பு தொடர்பான ஆலோசனை, பசுமைக் கட்டடம், நவீனத்தொழில்நுட்பம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்படும்.
மேலும் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன கட்டுமானக் கருவிகள், இயந்திரங்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகள் ஆகியவையும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.