தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில், 10-ம் ஆண்டு லட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள், நேற்று இரவு முதல் மே 27-ம் தேதி வரை பகல்-இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற உள்ளது. 11 நாள்கள் நடைபெறும் இந்த அகில இந்திய ஹாக்கிப் போட்டிகளில், பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்க உள்ளன. இப்போட்டிகள், கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறும். இப்போட்டிகளை செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் துவக்கிவைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, “இந்தியாவில் விளையாட்டுக் கல்லூரி என்பது தமிழகத்தில்தான் முதன் முதலில் கொண்டுவரப்பட்டது. மற்ற மாநிலங்களில் தற்போதுதான் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் விளையாட்டுக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பட்டுவருகின்றன. தமிழகத்தில், சிலம்பாட்ட அகாடமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. எந்த இடத்தில் அமைப்பது என்பது குறித்தும் இந்த பட்ஜெட்டிலேயே அமைப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றார்.