மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவியின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்ட கருப்பசாமியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மற்றொருவரான முருகனின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 25-ம் தேதிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
மாணவிகளிடம் தவறாக பாலியல் ரீதியாக பேசியதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஆளுநர் அமைத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழுவும் தனது விசாரணையை முடித்து அறிக்கையை ஆளுநரிடம் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.