திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வைகாசி வசந்தத் திருவிழா இன்று தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடும், கடற்கரைத் தலமுமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் வசந்தத் திருவிழாவும் ஒன்று. சித்திரை மாத வசந்த உற்சவத் திருவிழா, கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது. சித்திரை வசந்தத் திருவிழாவைப்போல, வைகாசி வசந்தத் திருவிழாவும் ஆண்டு தோறும் வைகாசி மாதம் சிறப்பாக நடைபெறும்.
இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வைகாசி வசந்தத் திருவிழா, இன்று தொடங்கி, 28.05.18-ம் தேதி வரை 10 நாள்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து, மாலையில் சிறப்பு அபிசேகம், அலங்காரத்திற்குப் பிறகு, சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி, வசந்த மண்டபத்தை 11 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். இந்தத் திருவிழா நாள்களில் தினமும் காலையில், சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் திருக்கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருள்கிறார். மாலையில், சுவாமி ஜெயந்திநாதர் கிரிவல உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் விழாக்குழு செய்துவருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.