November 28, 2021, 7:34 am
More

  பாலுமகேந்திரா பிரியர்களுக்காக இன்று ‘கதைகளின் நேரம்’

  11 May18 balu mahendraa - 1இயக்குனர், ஒளிப்பதிவாளர் என்று பன்முகங்களை கொண்ட பாலுமகேந்திராவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அவரது மாணவர்கள் இன்று சென்னை வடபழனியில் உள்ள RKV ஸ்டுடியோவில், நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.

  மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை, அப்படியே திரைப்பட காட்சிகளில் சித்தரிப்பதில் மிக நேர்த்தியான சிற்பி பாலு மஹேந்திரா என்று சொன்னால் அது மிகையாகாது. பாலுமகேந்திரா அவர்களின் இயற்பெயர் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன். இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் 1939 மே 20 ம் தேதி பிறந்த இவர், லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்றவர். சிறுவயது முதல் தன்னிடம் இருந்த புகைப்பட ஆர்வ மிகுதியின் காரணமாக 1970- ல் பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்று தங்கப்பதக்கம் பெற்றார்.

  நெல்லு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் 1971ம் ஆண்டு திரைத்துறைக்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமான பாலுமகேந்திராவிற்கு, இத்திரைப்படத்திற்கான சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை கேரள அரசு 1972 ஆம் ஆண்டு வழங்கியது.

  பாலு மகேந்திரா இயக்கிய முதல் படம் கோகிலா. 1977-ல் கறுப்பு வெள்ளையில் கன்னடத்தில் வெளியான இந்தப் படம், கன்னடத்தில் மட்டுமல்ல, தமிழிலும் டப் செய்யப்படாமலேயே 100 நாட்களைக் கடந்து ஓடியது. பாலு மகேந்திரா மிகவும் நேசிக்கும், ரசிக்கும் நாயகன் கமல்தான் ஹீரோ, ஷோபா நாயகியாக நடித்தார். இந்த படத்தில் நடிகர் மோகன் அறிமுகம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

  1978 ல் தமிழில் வெளிவந்த “முள்ளும் மலரும்” என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான பாலுமகேந்திரா இயக்கிய முதல் தமிழ் படம் அழியாத கோலங்கள். டீனேஜில் இருக்கும் மூன்று இளைஞர்களின் வாழ்க்கையை அரிதாரங்கள் பூசாமல் அப்படியே பதிவிட்டதால் என்னவோ இப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அதனை தங்கள் வாழ்க்கையுடன் இணைத்து பார்க்க முடிந்தது. இத்திரைப்படத்தில் நடிகர் கமல் ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

  பின்னர் இயக்கிய மூடு பனி படம் மூலம் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் முதன்முறையாக இணைந்தார். இந்த படத்திற்கு பின் பாலு இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படத்திற்கும் இசையமைத்தவர் இளையராஜா, இதில் பிடிவாதமாக இருந்தவர் பாலு என்ற பாலுமகேந்திரா.

  பாலு மகேந்திராவின் மாஸ்டர் பீஸ் என்றால் அது மூன்றாம் பிறை தான். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையை தன்னுடைய கேமரா கண்களின் மூலம் நம் மனதில் பதிவு செய்திருப்பார் பாலு. கதாநாயகன் கமல், ஸ்ரீதேவியின் மீது வைத்திருக்கும் அன்பை காதல் என்று கூறிவிட முடியாத அளவிற்கு காட்சிகளை செதுக்கி இருப்பார் பாலுமகேந்திரா. இதில் இளம் வயது கதாநாயகி, கதாநாயகனை நெருங்கும் நேரத்தில், அவன் விலகி செல்லும் பொழுது கதாநாயகனின் கண்ணியம் வெளிப்பட்டிருக்கும்.

  இதுவரை இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு இணையான காட்சி தமிழ் சினிமாவில் வரவில்லை என்று கூறலாம். கமல், ஸ்ரீதேவியின் அபார நடிப்பு இருவரையும் உச்சத்துக்குக் கொண்டு போன இப்படம், இரு தேசிய விருதுகள், மூன்று தமிழக அரசு விருதுகள் உள்பட 6 விருதுகளை பெற்றது.

  இவ்வாறு தொடர்ந்து, நீங்கள் கேட்டவை, உன் கண்ணில் நீர் வழிந்தால், ரெட்டை வால் குருவி, வீடு, வண்ண வண்ணப் பூக்கள், மறுபடியும், சதி லீலாவதி, அது ஒரு கனா காலம், தலைமுறைகள் போன்ற தனது ஒவ்வொரு படைப்பிலும் எதார்த்தங்கள் ததும்பியதால் என்னவோ ரசிகர்களுக்கு இவை தாக்கத்தை ஏற்படுத்த தவறியதில்லை.

  இந்திய சினிமாவின் போற்றத்தக்க இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திராவின் பட்டறையில் பயின்ற மாணவர்கள் அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அவரை கௌரவிக்கும் வகையில் ‘கதைகளின் நேரம்’ என்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். சென்னை வடபழனியில் உள்ள RKV ஸ்டுடியோவில் இன்று மாலை 5 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், பாலு மகேந்திரா இயக்கிய ‘நிலம்’ குறும்படம் முதலில் ஒளிபரப்பப்பட்டு, தொடர்ச்சியாக பட்டறை மாணவர்கள் இயக்கிய குறும்படங்களும் ஒளிபரப்பப்படுகின்றன.

  தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனு ராமசாமி, எ.எல்.விஜய், விஜய் மில்டன்,பாலாஜி ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணி, முரளி தயாரிப்பாளர் தனஞ்செயன்,பாலாஜி தரணீதரன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்கிறார்கள்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,746FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-