சென்னை ரஷ்ய பண்பாட்டு மையத்தில் இன்றும், நாளையும் ரஷ்ய கல்விக்கண்காட்சி நடைபெறுகிறது.
ரஷ்ய அறிவியல் பண்பாட்டு மையம் மற்றும் ரஷ்ய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கு வழிகாட்டும், இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ‘ஸ்டடி அப்ராட்’ ஆகியவை சார்பில், சென்னையில் 19-வது ஆண்டாக ரஷ்ய கல்விக் கண்காட்சி, இன்றும், நாளையும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, ரஷ்ய பண்பாட்டு மையத்தில் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சி பற்றிய அறிவிப்பினை வெளியிட்டு பேசிய ரஷ்ய கலாச்சார மைய இயக்குநர் மிகைல் கோர்பட்டோவ் கூறியதாவது
இந்தியா – ரஷ்யா இடையே வலுவான நல்லுறவு நெடுங்காலமாக இருந்து வருகிறது. விண்வெளி ஆய்வு, பொறியியல், தொழில்நுட்பம், உயிர்வேதியியல், மருத்துவம் போன்ற துறைகளில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகிறார்கள். ரஷ்யாவில் உயர்கல்வி பெறும் இந்திய மாணவர்கள், இரு நாடுகளைப் பற்றிய பொது அறிவை பெற்றிருப்பதால், இரு நாடுகளும் இணைந்து வளர்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய தென்னிந்திய ரஷ்ய துணைத் தூதர் யூரி எஸ். பிலோவ், ரஷ்ய மருத்துவ பல்கலைக்கழக (Volgograd State Medical University) நோய் கூறியியல் இணைப் பேராசிரியர் ஸ்மித் மேக்சிம், ‘ஸ்டடி அப்ராட்’ நிறுவன மேலாண் இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோர் கூறியதாவது:–
ரஷ்ய பல்கலைக்கழகங்களில் சேர, சி.இ.டி. (CET), ஐ.இ.எல்.டி.எஸ்.(IELTS) போன்ற முன்தகுதி தேர்வுகளை மாணவர்கள் எழுதத் தேவையில்லை. ஆனால், இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிப்படி, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மருத்துவம் படிக்க விரும்புவோர் நீட் (NEET) தேர்வு தேறியிருத்தல் வேண்டும். ஆனால், வெளிநாடுகளில் 2018-ஆம் ஆண்டுக்கு முன்னர் மருத்துவப் படிப்பில் சேர்ந்து, தற்போது அதற்கான முன் தயாரிப்பு படிப்புகளில் உள்ளவர்களுக்கு மருத்துவ கவுன்சில் இந்த ஆண்டு விதிவிலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கல்விக் கண்காட்சியில், ரஷ்யாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான, வோல்கோகிரேடு ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகம், ஃபார் ஈஸ்டர்ன் ஃபெடரல் பல்கலைக்கழகம் (Far Eastern Federal University), நேஷனல் ரிசர்ச் நியூக்ளியர் பல்கலைக்கழகம் எம்.இ.பி.எச்.ஐ. (National Research Nuclear University MEPhI), உரால் பெடரல் பல்கலைக்கழகம் (Ural Federal University), பெல்கோராட் ஸ்டேட் பல்கலைக்கழகம் (Belgorod State University), ஓரன்பர்க் ஸ்டேட் மருத்துவ கல்வி நிறுவனம் (Orenburg State Medical Academy) உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட ரஷ்ய கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
மருத்துவம், பொறியியில் சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், இந்த கண்காட்சிக்கு வரும்போது, தேவையான சான்றிதழ்களுடன் வந்தால், மாணவர்களின் தகுதிக்கேற்ப நேரடியாக கலந்தாய்வு செய்து, உடனடி சேர்க்கையும் வழங்கப்படவுள்ளது.
50 சதவீத மதிப்பெண் போதும்
ரஷ்யாவில் கல்வி ஆண்டு 2018, செப்டம்பரில் தொடங்குகிறது. தற்போது உலகின் 200 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் ரஷ்யாவில் உள்ள 600 அரசு பல்கலைக்கழகங்களில் கல்வி பெற்று வருகிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த 15000 மாணவர்கள் ரஷ்யாவில் கல்வி பயின்று வருகின்றனர்
இளநிலை மற்றும் நிறைநிலை படிப்புகளில் சேர்வதற்கு, மாணவர்கள், உரிய முக்கிய பாடங்கள் மற்றும் பட்டப் படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி. / எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் பொறுத்தமட்டில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40 சதவீதம் ஆகும். தமிழ் வழி பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகள், கண்காட்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 92822 21221 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
பல்லைக்கழகம், கல்வி பயிலும் இடம், படிப்பையொட்டி, ரஷ்ய மொழி வாயிலாக பயில்வதற்கு ஆண்டுக்கு கட்டணம் 2500 அமெரிக்க டாலரிலிருந்து 4000 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும். ஆங்கில மொழி வாயிலாக பயின்றால், ஆண்டு ஒன்றிற்கு 3500 அமெரிக்க டாலரிலிருந்து 6000 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என்றும் தெரிவித்தனர்.