சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், ரியல் மாட்ரிட் – லிவர்பூல் அணிகள் இன்று மோதுகின்றன.
கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி, உக்ரைன் நாட்டின் தலைகரான கீவில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15க்கு தொடங்குகிறது. ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கான இந்த போட்டியில், ரியல் மாட்ரிட் அணி நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லிவர்பூல் அணியின் முகமது சாலா இருவரின் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் ஜினடின் ஜிடேன், லிவர்பூல் பயிற்சியாளர் ஜர்கன் கிளாப் இருவரின் அனுபவ வியூகங்களும் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரியல் மாட்ரிட் கிளப் அணி 12 முறை சாம்பியன்ஸ் லீக் தொடரில் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்கும் ரியல் மாட்ரிட் அணிக்கு, லிவர்பூல் கடும் நெருக்கடி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்து நாட்டு கிளப் அணியான லிவர்பூல் ஏற்கனவே 5 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றி உள்ளது.