இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் இன்று தொடங்குகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபெல் நடால் 11வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிக கடினமானதாக கருதப்படும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்குகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர்-1 வீரரும் நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் ரபெல் நடால், செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவிரெவ், குரோஷியாவின் மரின் சிலிச் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களமிறங்குகின்றனர்.
களிமண் ஆடுகளத்தில் முடிசூடா மன்னனாக திகழும் ரபெல் நடால் இம்முறை சாம்பியன் பட்டம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பிரெஞ்ச் ஓபனில் இவர் 10 முறை சாம்பியன்பட்டம் வென்றுள்ளார்.

ஒரே கிராண்ட் ஸ்லாமில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். எனவே, 11வது முறையாக நடால் சாம்பியன் ஆவார் என ஆரம்பத்திலேயே எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடால் 16 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இவருக்கு கடும் போட்டி அளிக்கும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இங்கிலாந்தின் ஆண்டி மர்ரே இருவரும் இத்தொடரில் பங்கேற்கவில்லை. இப்போதைக்கு நடாலுக்கு போட்டியாளர்களாக ஜிவிரெவ், சிலிச் போன்றவர்களே கருதப்படுகின்றனர். ஜோகோவிச் பார்மில் இல்லாததால் நடாலை வீழ்த்தும் வாய்ப்புகள் குறைவே. எனவே, நடால் 11வது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். மகளிர் ஒற்றையர் பிரிவை பொறுத்த வரையில் கடும் போட்டி நிலவுகிறது. இதில் நடப்பு சாம்பியன் லாட்வியாவின் ஒஸ்டாபென்கோ, நம்பர்-1 வீராங்கனை ரோமானியாவின் ஹாலேப், டென்மார்க்கின் வோஸ்னியாக்கி, ஸ்பெயினின் முகுருசா, செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா என நட்சத்திர பட்டாளமே களமிறங்குகிறது.

இவர்களுக்கு மத்தியில், குழந்தை பெற்ற பிறகு ஓராண்டு இடைவெளிக்கு பின் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் களமிறங்குகிறார். ரேங்கிங்கில் 453வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள செரீனா கடந்த ஓராண்டில் 2 தொடர்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார். இளம் வீராங்கனைகளுக்கு அவரால் எந்த அளவுக்கு ஈடுகொடுக்க முடியும் என்பது கேள்விக்குறியே. முதல் சுற்றிலேயே செரீனா, 70வது இடத்தில் உள்ள செக் குடியரசின் கிறிஸ்டியானா பிளிஸ்கோவாவை எதிர்கொள்கிறார். 4வது சுற்றில் ரஷ்யாவின் மரிய ஷரபோவாவை சந்திக்க வேண்டும். இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செரீனா, 3 முறை பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றுள்ளார்.