― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு ஏன்? : உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி. விளக்கம்

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு ஏன்? : உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி. விளக்கம்

- Advertisement -

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100வது நாளாக கடந்த மே மாதம் 22-ஆம் தேதி  நடைபெற்ற போராட்டத்தின் போது, போலீசாரை சமூக விரோதிகள் சிலர் கல்வீசித் தாக்கி, வாகனங்களை தீயிட்டு சேதப் படுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது.

இதை அடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில்  போராட்டக்காரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 47 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது, தூத்துக்குடி நகரில் பல்வேறு பகுதிகளிலும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் தீவைக்கப்பட்டு 141 வாகனங்கள் நாசமடைந்தன.

தீயிட்டு நாசமாக்கப்பட்ட வாகனங்களில்  20, காவல் துறைக்கு சொந்தமானவை. 63 வாகனங்கள் அரசின் பல்வேறு துறைகளுக்குச் சொந்தமானவை. 58 வாகனங்கள் தனியாருடையவை. இந்த வாகனங்களை நாசம் செய்ததாக 177 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கலவரத்தில் 72 போலீசார் காயம் அடைந்தனர். அவர்களில் 26 பேர் உள் நோயாளியாகவும், 46 பேர் புற நோயாளியாகவும் சிகிச்சை பெற்றனர். போலீஸார் மீது தாக்குதல் தொடுத்ததாக, 185 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியானதற்கு போலீசார் விரிவான விளக்கம் தர வேண்டும் என வழக்கறிஞர்கள் 3 பேர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து முழுமையான விளக்கம் தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேட்டதை அடுத்து, காவல் துறை டி.ஜி.பி. ஓர் அறிக்கை தாக்கல் செய்தார்.

டி.ஜி.பி. சார்பில் உதவி ஐ.ஜி. மகேஸ்வரன் அதை தாக்கல் செய்தார். தூத்துக்குடியில் எந்தெந்த இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது? பலியானவர்கள் தூத்துக்குடியில் எந்தெந்தப் பகுதியில் வசித்தனர் என்பதைக் காட்டும் வரைபடத்துடன் அந்த விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் டி.ஜி.பி. கூறியிருப்பதாவது:- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம் மே 22 ஆம் தேதி 100வது நாளை எட்டிய போது பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கைப்பற்ற தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது அவர்களிடம் வருவாய்த் துறை அதிகாரிகளும், போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சம்மதித்தனர். மே 22ஆம் தேதி காலை தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் ஏராளமானவர்கள் திரண்டனர். பிறகு அவர்கள் அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டு சென்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு மிக அருகில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மடத்தூர் ஜங்ஷன் பகுதியில் திரண்டனர். அவர்களும் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டு வந்தனர். இரு முனைகளில் இருந்தும் ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தவர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் இருந்தனர். அவர்களை போலீசார் குறிப்பிட்ட சில இடங்களில் தடுத்து நிறுத்தினர்.

ஆனால் போலீசாரை மீறி ஊர்வலத்தில் வந்தவர்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது அவர்களில் சிலர் பல்வேறு விதமான விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபட்டனர். சாலையின் எதிர்ப்புறம் வந்த வாகனங்களை உடைத்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்த போலீசார் எவ்வளவோ முயன்றனர். ஆனால் அந்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. போலீசாரையும் தாக்கி விட்டு போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கினர்.

ஆட்சியர் அலுவலகத்தை ஊர்வலம் அடைந்ததும் வன்முறை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமாக மாறியது. போராட்டக்காரர்களில் சிலர் சரமாரியாக கற்களை வீசினர். சிலர் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க போலீசார் அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீதும் பெரிய அளவில் தாக்குதல் நடத்தினார்கள். போலீஸ் வாகனங்களையும் அடித்து உடைத்து, தீ வைத்து கடுமையாக சேதப்படுத்தினார்கள்.

அந்த வன்முறையை கட்டுப்படுத்த எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்தன.இந்த நிலையில் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட சிலர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புக்குள் ஊடுருவினார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் ஸ்டெர்லை ஆலை ஊழியர்களின் மோட்டார் சைக்கிள், வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

அவற்றுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். கீழ்தளத்தில் இருந்த ஜெனரேட்டர் அறைக்கும் தீ வைத்தனர். கீழ்தளத்தில் எரியத் தொடங்கிய தீ அந்த குடியிருப்பு முழுமைக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டது. அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சுமார் 150 பேர் வசித்து வருகிறார்கள். கீழ்தளத்தில் தீ வைக்கப்பட்ட காரணத்தால், அந்த 150 பேர் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும், தீயணைப்புப் படையினரும் தீயை அணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஆனால் போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தை தடுத்து நிறுத்தினர். போலீஸ்காரர்களையும் அந்த குடியிருப்புக்கு அருகில் வர முடியாதபடி தொடர்ந்து கல்வீசி தாக்கினார்கள். வன்முறை அதிகரித்த படி இருந்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பில் இருந்த சுமார் 150 பேர் மற்றும் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. அவர்களை காப்பாற்ற கடைசிக் கட்டமாக வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

ஆட்சியர் அலுவலகத்தையும், சுற்றுப்புற பகுதிகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கி சூடு நடத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலை உருவான தால்தான் போலீசார் துப்பாக்கி சூடு பிரயோகத்தை மேற்கொண்டனர். இல்லையெனில் மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும். அன்று மதியம் 1 மணிக்கு சுமார் 3 ஆயிரம் பேர் இந்திய உணவுக் கழக குடோன் பகுதியில் திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்கினார்கள். இதனால் அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர்.

உடனே கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஒன்று திரண்டு ஒரு போலீஸ்காரரை தாக்கி கொல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டது. அதில் கார்த்திக் என்பவர் உயிரிழந்தார். மதியம் 1.35க்கு மீண்டும் ஒரு கலவர கும்பல் திரண்டு வந்து போலீஸ்காரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. 2 அரசு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அந்த கலவர கும்பல் மீது தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

பிற்பகல் 3 மணிக்கு திரேஸ்புரத்தில் ஒரு கும்பல் பயங்கர கலவரம் செய்தது. இதனால் துணை தாசில்தார் கண்ணன் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டார். அந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழக்க நேரிட்டது. மதியத்துக்குப் பிறகு வன்முறையாளர்கள் நிறைய சொத்துக்களை சேதப்படுத்தினார்கள். முத்துக் கிருஷ்ணாபுரம், பொன்னகரம், சுந்தரவேல்புரம் ஆகிய இடங்களில் இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

மே 23-ந்தேதி அண்ணாநகரில் சுமார் ஆயிரம் பேர் திரண்டு வன்முறைகளில் ஈடுபட்டனர். அவர்கள் டுவிபுரத்தில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையை அடித்து உடைத்தனர். அரசு சொத்துக்களும் நாசம் செய்யப்பட்டன. அந்த கலவரத்தை கட்டுப்படுத்த மீண்டும் துப்பாக்கி சூடு நடத்த நேரிட்டது. அதில் மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் உயிரிழந்தார். இந்த வன்முறை தாக்குதலில் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனுக்கும் காயம் ஏற்பட்டது.

தூத்துக்குடியில் மே மாதம் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் 5 இடங்களில் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி ஆட்சியர் அலுவலகம் அருகில், எப்.சி.ஐ. அருகில், அண்ணாநகர் மெயின் ரோடு பகுதியில், திரேஸ்புரம் ஆகிய 4 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. எப்.சி.ஐ. அருகில் போலீசார் தடியடி நடத்தினார்கள்.

மே 22ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திரேஸ்புரம் பகுதியில் நிறைய பேர் திரண்டதால் துப்பாக்கி சூடு நடத்தும்படி மண்டல துணை தாசில்தார் உத்தரவிட்டார். அதன் பேரில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஜான்சிராணி (37) என்பவர் மரணம் அடைந்தார். (இந்த துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட தாசில்தார் பெயர் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை)

வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கி நாசமாக்கிய ஆட்சியர் அலுவலக பகுதி மற்றும் அரசு சொத்துக்களை பொதுப் பணித் துறைக்குட்பட்ட என்ஜினீயர் ஒருவர் ஆய்வு செய்து கணக்கிட்டுள்ளார். அவரது கணக்குப்படி  ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.28.12 லட்சத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகள் உடைப்பு, வாகனங்களுக்கு தீ வைத்தது காரணமாக ரூ.15.67 கோடிக்கு சேதம் மற்றும் இழப்பு ஏற்பட்டுள்ளது. – என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version