இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டியில் விர்த்திமான் சாஹாவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜுன் 14 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ளது. டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான விக்கெட் கீப்பர் விர்த்திமான் சாஹா காயமடைந்துள்ளதால் தமிழக வீரரும், கொல்கத்தா நைட்ரைடஸ் அணியின் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் மே 25 ஆம் தேதி கொல்கத்தா நைட்ரைடஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று போட்டியில் சாஹாவுக்கு காயம் ஏற்பட்டது. ஜுன் 14-ல் பெங்களூருவில் நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்வது குறித்து சாஹா தரப்பில் இருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை. எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு, இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தினேஷ் கார்த்திக்கை இடம்பெறச் செய்ய முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.