தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மூத்த வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் உள்ளனர்.
தூத்துக்குடியில் இந்த அமைப்பு சார்பில் மதுரை மக்கள் கண்காணிப்பக இயக்குனர் ஹென்றி டிபென் பேசுகையில், “தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்து கேட்டு, அதனை தேசிய, மாநில மனித உரிமை ஆணையத்தில் வழங்கவும், ஐ.நா சபையில் அறிக்கை அளிக்கவும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் 2 நாட்களாக, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கருத்துக்கள் கேட்டறிந்து வந்தனர்.
இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை தூத்துக்குடி பெல் ஓட்டலில் மக்கள் விசாரணை நடக்க உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு கலவரம் தொடர்பாக தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கலாம்.
இதில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோல்சே பட்டேல், அரிபரந்தாமன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காந்தி, தேவசகாயம் உள்ளிட்ட 24 பேர் கலந்து கொண்டு மனுக்களை பெறுகின்றனர். இவை அனைத்தும் அறிக்கைகளாக தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 16-ந்தேதி ஐ.நா.சபையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. எனவே மக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை மனுவாக கொடுத்து மனித உரிமை மீறல் குறித்து நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.