கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கம்போல் மீண்டும் செயல்படத் தொடங்குகிறது.
முதல் வாரத்தில் 18 எம்எல்ஏக்கள் நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மே 1ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, விடுமுறை காலத்தில் ஒவ்வொரு வாரமும் விடுமுறை கால நீதிமன்றங்கள் இயங்கின. இதில் ஒரு டிவிஷன் பெஞ்ச் மற்றும் 3 தனி நீதிபதிகள் வழக்குகளை விசாரித்து வந்தனர்.
இந்த விடுமுறைகால நீதிமன்றங்களில் பிஇ மாணவர் சேர்க்கை விண்ணப்பம் தொடர்பான வழக்கு, நிர்மலாதேவி மீதான வழக்கு சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு, எஸ்வி சேகர் முன்ஜாமீன் வழக்கு, கார்த்தி சிதம்பரம் மீதான கருப்பு பண மோசடி வழக்கு, சிபிஎஸ்இ பாடத்திட்டம் தொடர்பான வழக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. விடுமுறைகால நீதிமன்றங்கள் வழக்கம்போல நடைபெறும் நீதிமன்றங்களைப்போல் வாரம் முழுவதும் பரபரப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோடை விடுமுறைக்குப் பிறகு வழக்கம்போல் உயர் நீதிமன்றம் தனது பணிகளை இன்று தொடங்குகிறது.
உயர் நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, போலீஸ் ஆர்டலிகள் நியமனம் வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்துவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உயர் நீதிமன்றம் இன்று வழக்கம்போல் செயல்படத் தொடங்குவதால் இந்த முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் முதல் வாரத்திலேயே வெளிவரலாம் என்று வக்கீல்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்துமாறு உத்தரவிடக் கோரிய வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற பல்வேறு எதிர்பார்ப்புக்கள் உள்ளதால் இந்த வாரம் மிகவும் காரசாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.