புது தில்லி: தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து நக்மா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நீக்கப்பட்டுள்ள நக்மாவுக்குப் பதிலாக, தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக பாத்திமா ரோஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் திருநாவுக்கரசருக்கும் பொறுப்பாளரான குஷ்புவுக்கும் இடையே உரசல் அதிகரித்து வந்த நிலையில், குஷ்புவுக்கு நெருக்கமானவர்களை கட்டம் கட்டும் அதிமுக்கிய பணியில் தீவிரமாக ஈடுபட்டனர் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள். இதனால் குஷ்பு பதவி பறிக்கப் படலாம் என்று அரசல் புரசலாக ஒரு பேச்சு கட்சியினர் மத்தியில் ஓடிக் கொண்டிருந்தது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸுக்கு அண்மைக் காலமாக முகத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய நடிகை நக்மா, திடீரென தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனினும், நக்மா ஜம்மு – காஷ்மீர் மற்றும் புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நீடிப்பார் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில, மகளிர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நடிகை நக்மா கடந்த 2015ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.