சென்னை : ‘சசிகலா குடும்பம் ராஜ துரோகம் செய்தது’ என ஜெயலலிதா கூறியதாக ‘நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நேற்று அதிமுக., செய்தி தொடர்பாளரும் கட்சி நாளிதழின் ஆசிரியருமான மருது அழகுராஜ் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அளித்த வாக்குமூலம்:
சசிகலா உறவினர் ராவணன் தான் என்னை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தினார். பின் நமது எம்ஜிஆர்., நாளிதழில் பணியாற்ற ஆரம்பித்தேன். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேற்றியபோது என்னையும் பூங்குன்றனையும் ஜெயலலிதா அழைத்தார். அப்போது ‘சசிகலா குடும்பத்தினர் எனக்கு ராஜ துரோகம் செய்துள்ளனர். அவர்கள் வழியாக நீங்கள் வந்துள்ளீர்கள்; நீங்களும் அவர்களுடன் போக நினைத்தால் செல்லலாம்’ என்றார்.
நான் ‘உங்கள் நிழலில் வாழ ஆசைப்படுகிறேன்’ என நான் சொன்னேன். அதன்பின் நமது எம்ஜிஆர்., நாளிதழில் நிர்வாக இயக்குனர் பொறுப்பு கொடுத்தார். ஆனால் அந்த நாளிதழின் வரவு – செலவு கணக்குகளை சசிகலா உறவினர்கள் பார்த்ததால் அவர்களிடம் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஆசிரியராக மட்டும் பணியாற்றி வந்தேன்.
இதய சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது கட்சி நாளிதழில் சசிகலா உறவினர் பாஸ்கரனின் சினிமா தொடர்பான செய்தி வெளிவந்தது. அதையடுத்து என்னை அழைத்து ஒரு மணி நேரம் ஜெயாலலிதா திட்டினார்.
கட்சி நாளிதழில் வெளியாகும் தலையங்கங்களில் ஜெயலலிதா அவ்வப்போது சில திருத்தங்கள் செய்வார். மற்ற நாளிதழ்களில் அரசு தொடர்பாக வரும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்க குறிப்புகளை தருவார். நேரடியாக மறுப்பு தெரிவிக்க முடியாத செய்திகளுக்கு ‘சித்ரகுப்தன்’ என்ற புனைப் பெயரில் மறுப்பு தெரிவிக்குமாறு கூறுவார். கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா குடும்பம் நினைத்ததாக செய்தி வெளியானபோது அதற்கு அவர் எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை.
2016 செப். 21ல் அவர் உடல்நிலை மோசமானது; 22ல் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். அவரது வீட்டில் அவசர தேவைக்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட நிறுத்தப்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சர்க்கரை அளவு 500 ஆகவும் இதய துடிப்பு 40க்கு குறைவாகவும் இருந்தது. இதய துடிப்பு ஒரே நாளில் குறைய வாய்ப்பில்லை… என்று கூறியதாக தகவல் வெளியாயின.