நடிகர் ரஜினி காந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் நேற்றே சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் வெளியானது. தமிழகத்தில் இன்று வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.
உலகெங்கிலும் வெளியான காலா படம் குறித்து பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, சிங்கப்பூர் கேத்தே திரையரங்கில் இப்படத்தை முதல் ஷோ பார்த்த பிரவீன் என்ற இளைஞர், திரையரங்கத்தில் இருந்தபடி, காலா படத்தை லைவ் ஷோவாக 45 நிமிடங்கள் பேஸ்புக்கில் ஒளிபரப்பி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பேஸ்புக் மூலம் சமூக ஊடகவாசி ஒருவர் இவ்வாறு செய்த செயல் குறித்து உடனடியாக அந்நாட்டு போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் போலீசார் பிரவீனை கைது செய்தனர். காலா படத்தின் முதல் ஷோ தியேட்டரில் வெளியாகும் முன்னரே, அதனை இணையத்தில் வெளியிடுவோம் என்று, புதிய படங்களை இணையதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் தமிழ் ராக்கர்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதனால், சிங்கப்பூரில் பேஸ்புக் மூலம் காலா படத்தை லைவ் ஒளிபரப்பு செய்த சமூக ஊடகவாசி பிரவீனுக்கும் தமிழ் ராக்கர்ஸுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காலாவை பேஸ்புக்கில் லைவ்வாகக் காட்டியது, திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.