தமிழ் தலைவாஸ் கபடி அணி, ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து சென்னையில் தங்கும் வசதியுடன் கூடிய கபடி பயிற்சி அகடமியை தொடங்குகிறது. சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் இந்த கபடி பயிற்சி அகடமி செயல்படும். இதில் நாடு முழுவதிலும் இருந்து இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டுக்கான பயிற்சி ஜூலை மாதம் தொடங்கும். புரோ கபடி லீக் தொடரில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் காசிநாத பாஸ்கரன், முதல் ஆண்டு பயிற்சி அளிப்பார். இந்த அகடமியில் 17, 19, 25 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் வீரர்கள் சேர்க்கப்படுவர். இதற்காக மே மாதம் நாடு முழுவதும் நடந்த தேடுதல் முகாம்களில் இருந்து 1500 பேரை தமிழ் தலைவாஸ் அணி கண்டறிந்துள்ளது. இதில் இருந்து 70 பேர், கல்லூரி வளாகத்தில் இன்று முதல் 10ம் தேதி வரை நடைபெறும் தகுதி முகாம் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இதுவரை தேடுதல் முகாமில் கலந்து கொள்ளாதவர்களும் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் தகுதி முகாமில் பங்கேற்கலாம். இது குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை செயல் அலுவலர் விரேன் டி சில்வா கூறுகையில், ‘விளையாட்டை எப்படி ஒரு வாழ்க்கை தொழிலாக மேற்கொள்வது என்ற தேடுதலில் இருக்கும் ஏராளமான வீரர்களுக்கு இந்த அகடமி சிறந்த வழிகாட்டியாக இருக்கும். இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு தமிழ் தலைவாஸ் அணியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கும்’ என்றார் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை தலைவர் டாக்டர்.எம்.ரெஜினா ஜேப்பியார், ‘எங்கள் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள இந்த அகடமியில் மிகச்சிறந்த கபடி வீரர்களை உருவாக்குவதற்கான நவீன வசதிகளும், தரமான தங்கும் வசதியும் கிடைக்கும்’ என்றார்.