​25 ஆண்டுகளை நிறைவு செய்த திரைப்படம்

கிராபிக்ஸ் காட்சிகளால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஜூராசிக் பார்க் திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நேரத்தில் அந்த படத்தின் காட்சிகளை நினைவு கூரும் ஒரு சிறப்பு செய்தி…

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட டைனோசர்களை கண்முண்ணே கொண்டு வந்து நிறுத்தினார் ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஸ்டிவன் ஸ்பீல்பெர்க். பிரபல எழுத்தாளர் மைக்கெல் க்ரைட்டன் 1990ல் எழுதிய ஜுராஸிக் பார்க் என்ற நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. 1993ம் ஆண்டு வெளியான இந்த படம் குவித்த தொகை 6 ஆயிரத்து 900 கோடி ரூபாய்க்கு மேல்.

இப்போது உள்ள விலைவாசியுடன் ஒப்பிட்டால் உலகிலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற பெயரை பெற்றிருக்கும் . 90களில் படம் பார்த்தவர்களுக்கு இந்த படம் ஒரு பொக்கிஷம். அவர்கள் காலம் முடியும் வரை நினைவில் இருக்ககூடிய கொண்டாட்டம். சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கொண்டாடிய ஜுராசிக் பார்க் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்து விட்டன. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் உள்ள ஜுராசிக் பார்க் படத்தில் டைனோசர்கள் இடம்பெற்றது என்னவோ 15 நிமிடங்கள் மட்டுமே. அந்த பதினைந்து நிமிடங்கள் ஏறபடுத்திய தாக்கம் சினிமா உலகில் மறக்க முடியாதது.

இதில் டைனோசர்களை தத்ரூபமாக காட்ட பயன்படுத்தப்பட்ட SPECIAL EFFECTS , இன்றும் ஹாலிவுட் திரைப்பட ஜாம்பவான்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது. சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாத திரைக்கதை, ஒரு காட்சி கூட BORE அடிக்காமல் பார்த்து கொண்ட ஸ்பீல் பெர்கின் இயக்கம் என சினிமா உலகின் பொக்கிஷமாக இருக்கிறது ஜுராசிக் பார்க் திரைப்படம். ஹாலிவுட் படங்களை உலகின் எல்லா நாடுகளுக்கும் கொண்டு சேர்த்த கதவினை ஜூராசிக் பார்க்கின் டைனோசர்கள் திறந்து வைத்தன.

இந்த படம் கொடுத்த இமாலய வெற்றியை தொடர்ந்து தான் ஹாலிவுட்டில் GRAPHICS, SPECIAL EFFECTS போன்ற தொழில்நுட்பங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. ஜூராசிக் பார்க் படம் குவித்த வசூலை தொடர்ந்து டைனோசர்களை மையமாக கொண்டு நான்கு படங்கள் வெளியாகியுள்ளது. இதுவரை அவை குவித்த வசூல் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.

ஆன் ஸ்கிரினில் டைனோசரின் மிரட்டல்களை கண்டு வாயடைத்து போகும் ரசிகர்கள் இருக்கும் வரையில் தங்க முட்டை இடும் இந்த ஜுராசிக் பார்க் FRANCHISE இன்னும் கோடிகளை குவித்து கொண்டே இருக்கும்