தனியார் தொலைகாட்சி , அமீர் மீதான வழக்குகள் மற்றும் அரசு கேபிள் இருட்டடிப்பை கண்டித்து மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மதிமுக தொலைக்காட்சிக்கும் ஓராண்டு காலம் அரசுகேபிளில் இடம் கொடுக்கப்படவே இல்லை என்றும் நிதானத்தை இழந்துள்ள தமிழக அரசு காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது என்றும் மதிமுக குற்றம் சாட்டியுள்ளது
கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் விவாத நிகழ்ச்சி ஒன்று கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று அரசியல் பிரபலங்கள் பேசினர். திரைப்பட இயக்குனர் அமீரும் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்தார்.
இயக்குனர் அமீர் முன்வைத்த கருத்துகளுக்கு, நிகழ்ச்சியில் பார்வையாளராக பங்கேற்ற பா.ஜ.க.வினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இயக்குனர் அமீர் மீதும், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.