தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் பிரசவம் நடைபெறுகிறது : அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் 70 சதவிகிதம் பிரசவம் நடப்பதாகவும், தாயும், சேயும் இருப்பதற்கான தனி அறைகள் விரைவில் உருவாக்கப்படும் என்றும் சட்டப்-பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள பத்து வயது பள்ளி மாணவனை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிமுகப்படுத்தினார். அப்போது, இந்திய அளவில் தமிழக அரசு மருத்துவர் குழு முதல் முறையாக பத்து வயது சிறுவனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளதாக கூறினார்.

தமிழகத்தில் நடைபெறும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் வெளிநாட்டவருக்கு முன்னுரிமை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இப்படிப்பட்ட செய்திகளால் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அச்சமும் சந்தேகமும் ஏற்படக்கூடாது என்றார். மேலும் தமிழகத்தில் நடைபெறும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் விதிமுறைகளின் படி நடைபெறுவதாகவும் விஜயபாஸ்கர் விளக்கமளித்தார்.