மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ரஜிந்தர் சிங் தெரிவிக்கையில், சரக்கு லாரி போக்குவரத்து தற்போது கடும் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. எங்கள் பிரச்னைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எங்களை பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை.
இந்நிலையில் எங்கள் பிரச்னைகளில், நாளுக்கு நாள் டீசல் விலை உயர்வு ரத்து செய்ய வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் சுங்கக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது, மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் பாலிசி பிரீமியத்தை உயர்த்தக்கூடாது என்ற 3 கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதனால் விலைவாசி உயர்வு ஏற்படும். பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஆனால், லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதால் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதனால் நாடு முழுவதும் 75 ஆயிரம் சரக்கு லாரிகள் ஓடாது. மத்திய, மாநில அரசுகளுக்கு கோடிக்கணக்கில் வரி இழப்பு ஏற்படும். அதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் தர உள்ளோம் என்றார்.