கின்னஸ் யோகா நிகழ்ச்சி இன்று தொடக்கம்

புதுச்சேரியில் 121 பெண்கள் பங்கேற்கும் 36 மணி நேர கின்னஸ் யோகா சாதனை நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.

இதுகுறித்து மஹா மகரிஷி அறக்கட்டளை நிர்வாகி தயாநிதி வெளியிட்ட அறிக்கையில், காஞ்சிபுரத்தைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு இயங்கும், மஹாயோகம் என்ற அமைப்பின் சார்பில் யோகம், தியானம் மூலம் தமிழகம் முழுவதும் ஆன்மிக அறிவு பரப்பப்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு யோகாவில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தன்று 21 பேர், 37 மணி நேரங்கள் தொடர்ந்து யோகா செய்து லிம்கா சாதனை படைத்தனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு 46 மகளிர், 57 மணி நேரங்கள் தொடர்ச்சியாக யோகா செய்து கின்னஸ் சாதனைப் படைத்தனர். 2017-ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளி மாணவர்கள், இந்தியா புக் ரெக்கார்டு மூலம் யோகா சாதனை செய்தனர். 2017-ஆம் ஆண்டு 36 பேர், 57 மணி நேரங்கள் தொடர்ந்து யோகா செய்து, கின்னஸ் சாதனை படைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக நிகழாண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் 121 மகளிர் பங்கேற்கும் 36 மணி நேர தொடர் யோகா கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சி இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நாளை இரவு 7 மணிக்கு நிறைவு பெறுகிறது.

இந்த கின்னஸ் சாதனை யோகா நிகழ்ச்சியை, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தொடக்கிவைக்கிறார். அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், கமலக்கண்ணன், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதன் நிறைவு விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.