லாரி வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் – ஸ்டாலின்

லாரி வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் லாரி உரிமையாளர்களை உடனடியாக அழைத்து பேசி, பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் மத்திய அரசை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தினசரி டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் நேற்று முன்தினம் முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தமிழகத்தில் சில சங்கங்கள் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனமும், அதனை சார்ந்த 40 சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.