மக்கள் நீதி மய்யம் கட்சியின் பாடல்கள் சென்னையில் இன்று கமல்ஹாசன் வெளியிடுகிறார்

மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 21–ந் தேதி மதுரையில் தொடங்கினார். அன்றைய தினமே உயர்நிலைக்குழு உறுப்பினர்களையும் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மாவட்டந்தோறும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த நடவடிக்கையாக கட்சியின் பாடல்கள் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த விழாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்குகிறார்.

மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களை கட்சி பணிகளுக்கு அழைக்கும் விதமாகவும், அன்றாட நாட்டு நடப்புகளில் மக்கள் நீதி மய்யத்தின் கூர்நோக்கு பார்வை உள்பட பல்வேறு கருத்துகளை உள்ளடக்கிய 6 பாடல்கள் அன்றைய தினம் வெளியிடப்பட உள்ளது.

இந்த பாடல்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளரான கவிஞர் சினேகன் எழுதி இருக்கிறார். இந்த பாடல்களுக்கு தாஜ்நூர் இசை அமைத்து இருக்கிறார். 6 பாடல்களையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு, சிறப்புரையாற்றுகிறார்.