சென்னை: மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநில அணைகளைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டம் ஒன்றை அறிவித்தது. அதற்கான மசோதாவுக்கு 13.6.2018 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த மசோதாவுக்கு தமிழகத்தில் திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனிடையே இன்று மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியபோது, மாநில அரசின் உரிமைகள் இந்த சட்டம் மூலம் பறிக்கப்படுவதாகவும், இந்த மசோதாவை சட்டமாக்குவதை உடனே மத்திய அரசு நிறுத்த வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களுடனும் மத்திய அரசு கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னர் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இந்தத் தீர்மானம் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.