தமிழகத்தில் ஆளுநர் தேவையில்லை என்பதே திமுகவின் நிலைப்பாடு: கனிமொழி எம்.பி.

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் இருந்து மதவாதத்தை அகற்றிடுவோம் என்று சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தமிழகத்தில் ஆளுநர் தேவையில்லை என்பதே திமுகவின் நிலைப்பாடு என அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி பெண்ணின் பெயரால் நடப்பதாக கூறுகிறார்கள். ஆனால் எந்த அளவு மோசமான ஆட்சி நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்று செய்தி வெளியாகி உள்ளது. இந்த நாட்டில் பெண்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் மக்களுக்கு தேவையான எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தங்களுக்கு தேவையான திட்டங்களை மட்டுமே கொண்டு வருகிறார்கள்.

8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டுகிறார்கள். மக்களுடைய கருத்தை கேட்கவில்லை. இதற்கான பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், கேள்வி கேட்பவர்களை கைது செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.