கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸையும், அக்கட்சி தொண்டர்களையும் விமர்சித்து இருந்தார்
இதனால், ஆத்திரமடைந்த பாமக தொண்டர்கள் நேற்று சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் நடந்தது.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சமூக நீதியை பாதுகாப்பதற்காக 1950ம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் 1987ம் ஆண்டு ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற தொடர் சாலை மறியல் போராட்டம் தான்.
அந்தப் போராட்டம் தான் தமிழகத்திலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு என்ற மிகப்பெரிய உரிமையை பெற்றுக் கொடுத்தது. அந்தப் போராட்டத்தில் 21 பேர் தங்களின் உயிர்களை தியாகம் செய்தனர்.
இந்த சமூக நீதிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மன்னிப்புக் கோர வலியுறுத்தி தமிழக அனைத்து மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் இன்று பாமக சார்பில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.