உலக கோப்பை கால்பந்து தொடரில் நாக் சுற்று இன்று துவங்குகின்றன

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் சுற்று ஆட்டங்கள் இன்று துவங்குகின்றன. முதல் நாளில் பிரான்ஸ் – அர்ஜென்டினா, உருகுவே – போர்ச்சுகல் சந்திக்கின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பெரிதும் எதிர்பார்த்த அணிகள், சில அதிர்ச்சிகளை சந்தித்தாலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியது. முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின், பிரான்ஸ், அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, இங்கிலாந்து ஆகிய 6 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. மற்றொரு முன்னாள் சாம்பியனான இத்தாலி, இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை.

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள், இன்று துவங்கி, ஜூலை 3ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் இந்திய நேரப்படி இரவு 7.30, இரவு 11.30 மணி என இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகள், காலிறுதிக்கு முன்னேறும்.

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகளும், இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் உருகுவே – போர்ச்சுகல் அணிகளும் மோத உள்ளன.

இந்த போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற 41 சதவிகித வாய்ப்புகளும், அர்ஜென்டினா அணி வெற்றி பெற 27 சதவிகித வாய்ப்புகளும், போட்டி டிராவில் முடிய 32 சதவிகித வாய்ப்பும் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதேபோன்று உருகுவே – போர்ச்சுகல் இடையேயான போட்டியில் உருகுவே அணி வெற்றி பெற 34 சதவிகித வாய்ப்பும், போர்ச்சுகல் அணி வெற்றி பெற 33 சதவிகித வாய்ப்பும், போட்டி டையில் முடிய 33 சதவிகித வாய்ப்பும் உள்ளதாக தெரிகிறது.