தர்மபுரி அருகே பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு கோயில் கட்டவும், செங்கல்பட்டில் சர்வதேச யோகா மையம் அமைக்கவும் முன்வந்த தமிழக அரசுக்கு பாரத மாதாவின் புதல்வர்கள் சார்பில் நன்றியையும் மகிழ்ச்சியையும் பாராட்டுதல்களையும் ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துக்கொள்வதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவர் குமாரசுவாமி, தர்மபுரி மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், சேலம் கோட்ட செயலாளர் சந்திரசேகர், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சாம்பமூர்த்தி, மாநில அமைப்பாளர் ரவிக்குமார் ஆகியோர் நேற்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இது குறித்து தங்களது மகிழ்ச்சியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.
பாரத மாதா கோயில் குறித்துக் கூறிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில தலைவர் குமாரசுவாமி, இது கோடிக்கணக்கான தேசபக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியது என்று கூறினார். அவர் மேலும் தெரிவித்தது…
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் கனவு, லட்சியம். அதற்காகவே தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார். நண்பர்கள் உதவியுடன் பாப்பாரப்பட்டியில் ஆறரை ஏக்கர் நிலம் வாங்கி, அந்த இடத்துக்கு ‘பாரதபுரம்’ என்று பெயரிட்ட அவர், தேசபந்து சித்ரஞ்சன் தாஸை அழைத்துவந்து 1923ல் அடிக்கல் நாட்டினார்.
அதன்பிறகு, சுதந்திர போராட்டங்களுக்காக சிறை சென்ற இடத்தில் சீதனமாகப் பெற்ற தொழுநோயால் பஸ், ரயில்களில் பயணிக்க ஆங்கிலேய அரசு தடை விதித்தபோது, தனக்குள்ள நோயையும் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் ஊர், ஊராக நடந்தே சென்று, சொற்பொழிவாற்றி பாரதமாதா கோயிலுக்கு நிதி திரட்டினார்.
ஆனால், கோயில் கட்டப்படாமலேயே அவர் வாழ்க்கை அடுத்த 2 ஆண்டுகளில் முடிந்துபோனது. அன்றிலிருந்து இன்றுவரை அங்கு பாரதமாதாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று கோரி பல போராட்டங்கள் நடந்தன. பாரதமாதாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தும்கூட, அரசியல் காரணங்களால் நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளை கடந்தும் பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு கோயில் கட்டும் பணி தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பாப்பாரப்பட்டியில் ரூ. 1.5 கோடி செலவில் பாரதமாதா கோயில் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது தமிழ்நாடு மட்டுமல்ல பாரத நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தேசபக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தை ஆன்மீகத்தோடு இணைத்தவர் சுப்பிரமணிய சிவா. இந்த தேசத்தின் மீதான பக்தி எதிர்கால சந்ததிக்கு குறைந்துபோகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பாரத மாதாவுக்கு ஒரு கோயில் வேண்டும் என்பது சிவாவின் ஆவலாக இருந்தது.
சர்வ மதத்தினரும் வந்து வழிபடக்கூடிய இடமாக, தேசபக்திச் சுடரை அணையாமல் பாதுகாத்து கொழுந்துவிட்டு பிரகாசிக்கச் செய்யும் கேந்திரமாக அந்த கோயில் இருக்க வேண்டும் என்பது அவரது வேட்கையாக இருந்தது. இந்த தேசம் ஒன்றல்ல. வெவ்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட பல்வேறு நாடுகளின் தொகுப்பு என்ற இடதுசாரி சித்தாந்தம் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள சூழலில், மொழியின் பெயராலும் இனத்தின் பெயராலும் பிராந்தியவாதம் தலைதுாக்கியுள்ள சூழலில், தேசியத்தை வலியுறுத்தும் ஒரு வரலாற்று சின்னம் தமிழகத்தில் அமைவது காலத்தின் அவசியம். அதைப்புரிந்து பாரத மாதா கோயில் கட்ட தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
சுவாமி விவேகானந்தர், அரவிந்தர், சுப்ரமண்ய பாரதி, திரு.வி.க. போன்ற எண்ணற்ற மகான்கள் நம் நாட்டை சக்தியின் வடிவமாக பாவித்து, அந்த சக்தியின் பெயர் பாரத மாதா, அவளே நம் வழிபடு தெய்வம் என்று கூறியது நினைவிற் கொள்ளத்தக்கது. பாரத மாதா கீ ஜெய், வந்தே மாதரம் என்ற கோஷங்கள் நம் சுதந்திரப் போராட்ட வீர்ர்களுக்கு உத்வேகம் ஊட்டியது.
அதேபோல், மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ இந்த உலகுக்கு பாரதம் கொடுத்த கொடை யோகா. பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று சர்வதேச யோகா தினத்தை அறிவித்ததன் மூலம் யோகாவை ஐநா சபை சிறப்பித்துள்ள நிலையில், சர்வதேச யோகா மையம் அமைக்க நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு கோயில் கட்டவும், செங்கல்பட்டில் சர்வதேச யோகா மையம் அமைக்கவும் முன்வந்த தமிழக அரசுக்கு இந்த தேசத்தில் பிறந்த பாரதமாதாவின் புதல்வர்கள் சார்பில் நன்றியையும் மகிழ்ச்சியையும் பாராட்டுதல்களையும் ஆர்எஸ்எஸ் தெரிவித்துக்கொள்கிறது… என்று கூறினார் அவர்.