சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக சான்றிதழ்களை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக தற்காலிக சான்றிதழ்களை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என துணைவேந்தர் பி.துரைசாமி தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து வெளியே வந்த துணைவேந்தர் பி.துரைசாமி கூறியதாவது:-

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் 132 உள்ளன. இந்த கல்லூரிகளில் தற்போது படித்து முடித்த மாணவர்களின் தற்காலிக சான்றிதழ்கள் முதல் முறையாக சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in ) வெளியிடப்படுகிறது. அந்த சான்றிதழ்களை ஜூலை 1-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது 3 மாதம் செல்லும். அதற்குள் நிரந்தர சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இனி இளநிலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் தற்காலிக சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த சான்றிதழ்களை கொண்டு மாணவர்கள் எந்த கல்லூரியிலும் சேரலாம். அதற்கான உத்தரவு அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும். அந்த சான்றிதழில் ரகசிய கோடு உள்ளது.

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி முன்னாள் இயக்குனர் ஜி.மோகன்ராம் பணியில் இருந்தபோது தணிக்கை குழுவினர் பண விஷயம் தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. தற்போது அவர் ஓய்வுபெற்ற பிறகும் ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்காமல் உள்ளார். இந்த கூட்டத்திலும் அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை.

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் இளநிலை படிப்பில் இலவச கல்வி அளிக்க 3 இடங்கள் வழங்க உள்ளோம். அதற்கு பெற்றோரில் ஒருவரை இழந்தவராகவும், ஏழை மாணவராகவும், பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்த இடங்களை 10–ஆக அதிகரிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி சார்பில் வெளிமாநிலங்களில் மையம் அமைத்து தேர்வு நடத்தப்பட்டது. அப்போது சிலர் மோசடியாக கையெழுத்திட்டு தேர்வு எழுதியது தெரியவந்தது. அவர்கள் எந்த பல்கலைக்கழகத்திலும் இனிமேல் தேர்வு எழுத முடியாது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.