மருத்துவப் படிப்பு, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான, இடஒதுக்கீடு ஆணையை முதல் 10 மாணவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 28-ஆம் தேதி வெளியானது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள மூன்றாயிரத்து 501 அரசு இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இன்று முதல் வரும் 7ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல்நாளான இன்று மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகள் பங்கேற்றனர்.

மாற்றுதிறனாளிகளுக்கான பிரிவில் 28 மாணவர்களும், விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு பிரிவில் 15 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான பிரிவில் 60 மாணவர்கள் என மொத்தம் 103 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.