சென்னை: காவிரி விவகாரத்தில் மீண்டும் அதே பல்லவியைப் பாடி வருகிறார் திமுக., செயல் தலைவர் ஸ்டாலின். காவிரி ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை
என்று கூறிய அவர், அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.
அப்போது அவர், காவிரி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என கர்நாடகம் கூறிக் கொண்டிருக்கிறது. காவிரி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. காவிரி விவகாரத்தில் கர்நாடகா நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது. உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
இதே போல், இன்று சட்டமன்றத்தில் காவிரி விவகாரம் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக சார்பில் துரைமுருகன், அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.