அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த இன்று முகாம்

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன் முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் அமையும் தனித்த மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பித்திட நவம்பர் 3 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

மேலும், சேலம் மாநகராட்சியில் 4 மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் 2016 அக்டோபர் 20 ஆம் தேதிக்கு முன்பு கிரயம் பெற்றுள்ள அனுமதியற்ற மனைகளின் உரிமையாளர்கள் ரூ. 500-ஐ இணையதள முகவரியில் பணம் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பணம் செலுத்தியற்கான ரசீதுடன், இச்சிறப்பு முகாமில் மனையின் கிரையப் பத்திர நகல் (20.10.2016 க்கு முன்பு கிரயம்) நடப்பு வரையிலான வில்லங்க சான்று நகல், பட்டா நகல் நகர நில அளவை வரைபடம் நகல். மனை அமையும் மனைப்பிரிவின் வரைபடம் – 5 நகல்கள், அடையாள அட்டை (ஆதார் அட்டை /வாக்காளர் அடையாள அட்டை) ஆவணங்களுடன் மனை உரிமையாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளின் உரிமையாளர்கள் இம்முகாமினை பயன்படுத்தி, தங்களது தனி மனைகளை வரன்முறைப்படுத்திக்கொள்ளலாம். இந்த முகாம் மாநகராட்சி தொங்கும் பூங்கா வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு துவங்கும் என மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.