லோக் ஆயுக்தா மசோதா இன்று தாக்கல்

தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்துவதற்கான சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தொடரிலேயே விவாதித்து நிறைவேற்றப்படுகிறது.

மாநிலங்களில் வரும் 10-ம் தேதிக்குள் லோக்ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பாரதீய ஜனதா தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த பொது நல மனுவில் அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.

குறிப்பாக தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களில் இதனை நிறைவேற்ற வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம் செயல்படுவதால் லோக் ஆயுக்தா அமைப்பு தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

லோக்பால் அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு காத்துக்கொண்டு இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் இதனை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

2014-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது லோக் ஆயுக்தா சட்ட பிரிவுகளை ஆய்வு செய்வதற்காக 7 உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றமும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தாதது ஏன் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தது. இறுதியாக வருகிற 10-ந் தேதிக்குள் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நாளை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 9-ந் தேதி வரை தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. அதற்குள் இந்த மசோதா மீது விவாதம் நடத்தி நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோக் ஆயுக்தா என்பது லஞ்ச ஒழிப்பு புகாரை விசாரிப்பதற்கு அதிகாரம் படைத்த அமைப்பாகும். பொது மக்களிடமிருந்து இந்த அமைப்பு புகார்களை பெற்று விசாரணை நடத்தும். இந்த புகார்களின் அடிப்படையில் ஊழல் அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்துவதற்கு இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு.

லோக் ஆயுக்தாவின் தலைவராக நியமிக்கப்படுவர் 5 ஆண்டு காலம் பதவி வகிப்பார் அல்லது 70 வயது வரை பதவியில் இருப்பார். அவருக்கு இந்திய தலைமை நீதிபதிக்கு இணையான சம்பளம் வழங்கப்படும். இதன் உறுப்பினர்களுக்கு உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும்.

ஊழல் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிடுவதற்கு இவர்களுக்கு அதிகாரம் உண்டு. லோக் ஆயுக்தா அமைக்கப்பட்ட பிறகு அதன் தலைவரை டிஸ்மிஸ் செய்யவோ, மாற்றவோ அரசுக்கு அதிகாரம் இல்லை. சட்டசபையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்துதான் அவரை பதவி நீக்கம் செய்ய முடியும்.
ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளும் லோக் ஆயுக்தா மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அமைச்சர் கள் உள்பட அனைவர் மீதும் விசாரணை நடத்தும் வகையில் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.