உலகக் கோப்பை கால்பந்துப் போட்டித் தொடரின் கால் இறுதி ஆட்டங்கள் இன்று முதல் தொடங்கவுள்ளன.
ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி கடந்த மாதம் 14-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. லீக் சுற்றுகள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. போட்டி கால் இறுதி ஆட்டங்களை எட்டிய நிலையில் சூடு பிடித்துள்ளது.
இதனால் உலகெங்கிலுமுள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் போட்டிகளைக் கண்டுகளித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று முதல் கால் இறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இன்று 2 கால் இறுதி ஆட்டங்களும், நாளை 2 கால் இறுதி ஆட்டங்களும் நடைபெறவுள்ளன.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் கால் இறுதி ஆட்டத்தில் உருகுவே, பிரான்ஸ் அணிகள் மோதவுள்ளன. இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில், பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை செய்ய வுள்ளன.
நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து சுவீடன் அணி விளையாடவுள்ளது. இரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் ரஷ்யா, குரோஷியா அணிகள் களம் காணவுள்ளன.