கோவையில் உலகத் தமிழ் இணைய மாநாடு: இன்று தொடங்குகிறது

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தம்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, பல்கலைக்கழக வளாகத்தில் இன்று தொடங்குகிறது.

17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, அறிவுசார் தமிழ்த் தேடுபொறிகள்’ என்ற தலைப்பில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடு, ஆய்வரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி அரங்கம் என்ற மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது. கண்காட்சியின் ஆய்வரங்கில், இயல்மொழி பகுப்பாய்வு, இயந்திர மொழிபெயர்ப்பு, பேச்சு- எழுத்து பகுப்பாய்வு, தேடுபொறி, மின்னகராதி அமைத்தல், கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடு, செயலிகளைத் தரப்படுத்துதல், இணையவழி தமிழ்க் கல்வி, இணைய பாதுகாப்பு, தொழில்நுட்ப யுகத்தில் தமிழ் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 70க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

மக்கள் அரங்கில், பொருள்களின் இணையம், பைதான், ரோபோடிக் தொழில்நுட்பம், 3 டி பிரின்டிங் தொழில்நுட்பம், குறுஞ்செயலி உருவாக்கம், மொழியியல், மேகக் கணிமை தொழில்நுட்பம், வலைப்பதிவு உருவாக்கம் உள்ளிட்ட பயிற்சிகள் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளன.

கண்காட்சி அரங்கில், மாணவர்கள், பொதுமக்களுக்கான பலகைக் கணினி முதல் அனைத்துக் கருவிகளும் தமிழ்க் கருப்பொருளுடன் விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும் தமிழ் கற்க உதவும் ஒலிக் குறுவட்டுகள், காணொலிக் குறுவட்டுகள், தமிழ் நூல்கள், கணினித் தமிழ் வளர்ச்சி குறித்த நூல்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட கணினி வல்லுநர்கள் பேராளர்களாக வருகை தர உள்ளனர்.