சென்னை: தனது பிறந்த நாளில் தமிழகத்தில் மோடி வரப் போகிறார் என்றும், மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்வதாகவும் கூறுகின்றனர் பாஜக.,வினர்.
மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வரும் 15ஆம் தேதி வருவார் என்று கூறப்பட்டிருந்தது. அன்று காமராஜர் பிறந்த நாள் என்பதால், தடபுடலாக ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். ஆனால் அன்று மோடி, வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சந்திக்க இருப்பதால் தமிழகம் வரும் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது.
வழக்கமாக செப்டம்பர் மாதம் அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பிறந்த நாள் என திராவிடக் கட்சிகள் விழாக்கள் கொண்டாடும் மாதமாக இருந்துவருகிறது. அது அவர்களுக்கு மட்டும்தானா, எங்களுக்கும்தான் எனக் காட்டும் வகையில், பாஜக.,வினர் அதே செப்டம்பர் மாதத்தில் மதுரையில் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர். செப். 17 அன்று, பிரதமர் மோடியின் பிறந்த நாள் வருகிறது. அதை மதுரையில் மாநாடு போல் கொண்டாட முடிவு செய்துள்ள பாஜக.,வினர், அதை ஒட்டி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ளனர். அப்போது அவர் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என்கின்றனர் பாஜக.,வினர்.