தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் கருணை மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.கே,ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது. அப்போது, நீதிபதிகள், “ஆங்கிலத்திலிருந்து தமிழில் கேள்விகள் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது பல்வேறு தவறுகள் நிகழ்ந்துள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், மொழிபெயர்ப்பு தவறாக இருந்த 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்றதோடு, மதிப்பெண்கள் 2 வாரத்திற்குள் வழங்கப்பட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட வேண்டும்” என்று சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டனர்.