ஐயாறப்பர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் இன்று நடக்கிறது

தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த கோவிலில் 13 நாட்கள் நடைபெறும் சித்திரை உற்சவம் சப்தஸ்தான விழாவின்போது 9ஆம் நாள் விழவாக தேர்த்திருவிழா நடைபெறும். இதில் ஐயாறப்பர் எழுந்தருளும் பெரியதேர் மிகவும் பழமையானதாகவும் வெயில், மழை போன்ற இயற்கை பாதிப்புகளால் பழுதடைந்தது. கடந்த 2 ஆண்டுகளாக தற்காலிக கட்டுத்தேர் கட்டப்பட்டு அத்தேரில் ஐயாரப்பரை எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடைபெற்றது. கடந்த ஆண்டு பழுதடைந்த பெரிய தேருக்கு பதிலாக புதிய தேர் கட்ட தேவஸ்தானத்தால் தீர்மானிக்கப்பட்டு 17¾ அடி உயரம் 12.9 அடி அகலத்தில் பழமை மாறாமல் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பெரிய தேர் கட்டும் பணி தொடங்கப்பட்டு நிறைவுற்றுள்ளது.

இந்த புதிய தேருக்கான வெள்ளோட்டம் இன்று காலை நடைபெறுகிறது. தொடர்ந்து இன்று காலை 8 மணிக்குமேல் பூர்ணாகுதி மற்றும் தீபாராதணை நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு மேல் புனித நீர் நிறைந்த கடம் புறப்பாடும் அபிஷேக ஆராதணைகளும் நடைபெற்று திருதேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. இவ்விழாவில் திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 26-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளும் கலந்துகொண்டு அருளாசி வழங்குகிறார்கள்.